CAA விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு; அமிர்தம்போல் விஷத்தை விதைக்கிறது: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

சென்னை: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை தடை செய்ய வேண்டும் என நடிகையும், காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி  காஸ், பஜன்புரா பகுதிகளில்  நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக  உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகை குஷ்பு, குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக 60 நாட்களுக்கு மேல்  போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து சரியான புரிதல் மக்களிடம் இல்லை என பாஜக கூறுகிறது. ஆனால் மக்களை  அழைத்துப் பேசவும் மத்திய அரசு தயாராக இல்லை. டெல்லியில் பெரும் கலவரம் நடந்துக் கொண்டு இருக்கும் போது டிரம்ப் வந்ததால் கவனிக்க முடியவில்லை  என்று கூறுகின்றனர்.

உள்துறை அமைச்சர் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாடு முழுவதும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக  இருக்கிறது. என்.ஆர்.சி. பற்றி பேசவே இல்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் நாடு முழுவதும் என்.ஆர்.சி. கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர்  அமித்ஷா கூறுகிறார். பிரதமர்- உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் யார் பொய் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. மக்கள்  எழுப்பும் பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை பயமுறுத்த தொடங்கி உள்ளனர். பா.ஜ.க. தலைவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளனர்.  பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க. தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை. டெல்லி போலீஸ்  என்ன செய்து கொண்டு இருக்கிறது? நாடு எந்த திசையில் போகிறது. எந்த திசையில் போக உள்ளது என்பதை பார்க்கும்போது பயமாக உள்ளது என்றார். நாடு  அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது பிரச்சனைகள் தொடங்கி உள்ளதை பார்த்தால் நாளை எங்கே போய் முடியும் என்ற பயம் ஏற்படுகிறது.

மக்கள் மத்தியில் அமிர்தம்போல் விஷத்தை விதைக்கின்றனர், இது நிறுத்தப்பட வேண்டும். அமைதி பூங்காவான இந்தியாவை வேறு திசையில் ஏன் கொண்டு  செல்ல நினைக்கிறார்கள்? குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை பற்றிக் கேள்வி கேட்டு மக்கள் போராடுகின்றனர். பதில் சொல்ல தெரியாததால் பதிலளிக்க  மறுக்கின்றனர். இதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பா.ஜ.க. நினைப்பதுதான் மக்களிடம் ஊடகம் முலமாக செல்ல வேண்டும் என்று செயல்படுகிறது  என்றும் தெரிவித்தார்.

Related Stories: