×

'1984 சீக்கிய கலவரம் போன்று டெல்லியை ஆக்கிவிடாதீர்கள்'.. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்க : டெல்லி முதல்வருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்லி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி வன்முறை : 22 பேர் பலி


டெல்லியில் கடந்த சில தினங்களாக குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நடைபெறும் வன்முறை வெடித்துள்ளது. இதுவரை 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமூக சேவகர் ஹர்ஸ் மந்தர் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வன்முறைகளுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த வழக்கு இன்று நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

கலவரத்தை தூண்டும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ நீதிமன்றத்தில் ஒளிபரப்பு


இதையடுத்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை இன்று ஹைகோர்ட்டில் ஒளிபரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அனைத்து தரப்பு வக்கீல்கள் மற்றும் டி.சி.பி ராஜேஷ் தியோ மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்னிலையில் இந்த வீடியோ பதிவு நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. வீடியோவை பார்த்த நீதிபதி முரளிதர், இந்த நிலைமை மிகவும் விரும்பத்தகாதது என்று அதிருப்தி வெளிப்படுத்தினார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன் என்றும் காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சில கருத்துக்களை தெரிவித்த நிலையில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்

*டெல்லி மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

*1984ம் ஆண்டு கலவரத்தை போல் ஒன்றை மீண்டும் உருவாக்கி விடக் கூடாது.

*பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் இதுபோன்ற வன்முறையை மீண்டும் அனுமதிக்கக் கூடாது.  

*இசட் பிரிவு பாதுகாப்பை போன்று மக்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.

டெல்லி அரசுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்

*டெல்லி அரசுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*டெல்லி மக்களுடன் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

*கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

*வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.

*மக்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். வடகிழக்கு டெல்லி வன்முறையில் உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது துரதிர்ஷ்ட வசமானது.  

*டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்கள் திறக்க வேண்டும்.

*டெல்லி மக்களின் அவசர உதவிக்காக பிரத்யேக உதவி எண்ணை ஏற்படுத்துவது சாத்தியமா என்று ஆராய வேண்டும். சிவில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த முடியுமா ?

*டெல்லி வன்முறை வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் ஜூபேடா பேகம் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.

*டெல்லியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு நேர நீதிபதிகளை நியமிக்க, மாவட்ட நீதிபதிகளிடம் 2 வாரங்களுக்குள் டெல்லி காவல்துறை விண்ணப்பிக்க வேண்டும்.

*வன்முறையால் மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இயக்குனர்  சிகிச்சை அளிக்க வேண்டும். 

இவ்வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.



Tags : Delhi ,Sikh ,places ,High Court , Delhi, CM, Arvind Kejriwal, Demands, Northeast, Citizenship Law, Violence, Supreme Court, Supreme Court
× RELATED புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு