குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு: விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு!

சென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சியடைந்திருப்பதால் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதனால் குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி சிபிசிஐடியின் அதிரடி விசாரணையில் பல ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பான மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட ஓரிரு பயிற்சி மையங்களில் இருந்து அதிகப்படியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி மையங்கள் பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான பயிற்சி மையங்களாவும், அக்கட்சியினை சார்ந்தவர்கள் நடத்தும் பயிற்சி மையங்களாகவும் இருக்கின்றன. இவ்வாறான பயிற்சி மையங்களில் இருந்து ஆளுங்கட்சி செல்வாக்கின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. அதுமட்டுமின்றி பயிற்சி மையங்களில் தேர்வுக்குரிய வினாத்தாள்களை முன்னரே வழங்கி வருவதாகவும், அதன் காரணமாகவே தேர்வுகளில் சிறப்பான இடத்தினை தேர்வர்கள் பிடித்து தேர்ச்சியடைய முடிகிறது எனவும் கூறப்படுகிறது.

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடைபெற்றால் உண்மையான விவரங்கள் வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோரை சந்தித்து மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த வழக்கில் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை ஓரிரு நாட்களில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: