முன்பே பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம்; நிச்சயம் தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்...பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

ஈரோடு: தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகம்   உட்பட 17 மாநிலத்தில் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை  வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் ஆகிய 6  பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2ம் தேதி உடன் முடிவடைகிறது. தமிழகத்தில் மார்ச் 26ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை,  மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல்  நடைமுறைகள் மார்ச் 30ம் தேதி முடிவுக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  புஞ்சை புளியம்பட்டியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், வரும் 2021ம்  ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையே இருப்பதாக தெரிவித்தார்.

ரஜினியுடனான கூட்டனி குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும் பார்க்கலாம் என்றார்.  மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தியதாகவும், தங்களுக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மறைந்த  முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவை கடுமையாக விமர்சித்த தேமுதிக, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  அவர்களுடன் கூட்டணி  அமைத்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் வாரியாக எம்பிக்கள் காலியிடம்:

மகாராஷ்டிரா (7), ஒடிசா (4), தமிழ்நாடு (6), மேற்குவங்கம் (5) ஆகிய மாநிலங்களில் வரும் ஏப். 2ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது. ஆந்திரபிரதேசம் (4),  தெலங்கானா (2), அசாம் (3), பீகார் (5), சட்டீஸ்கர் (2), குஜராத் (4), அரியானா (2), இமாச்சல பிரதேசம், மணிப்பூர் தலா (1), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் தலா (3) ஆகிய மாநிலங்களுக்கு ஏப். 4ம் தேதி பதவியிடங்கள் காலியாகிறது. மேகாலயாவில் வரும் ஏப். 12ம் தேதி ஒரு பதவியிடம் காலியாகிறது.

Related Stories: