மின்னணுக் கழிவுகள் மூலம் உயிர்ப்பிக்கும் சிலைகள்: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி... பள்ளி, பூங்காக்களில் வைக்க ஏற்பாடு!

சென்னை: நெகிழி கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, தற்போது இ - வேஸ்ட் உருவாவதும், உலகளவில் அதிகரித்து வருகிறது. மின்னணு கழிவு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மின்னணு கழிவுகள் அதிகரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்கால வாழ்க்கையில் சுமார்ட் போனில் தொடங்கி, பல்வேறு மின்னணு சாதனங்கள் அவசியமாகிவிட்டன. இன்றைய நவீன உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிக்கள், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு சுமார்ட் போன் என வீடு முழுக்க நவீன கேஜெட்டுகளின் ஆக்கிரமிப்புதான். இதன் விளைவு கடந்தாண்டில் மட்டும் உலகம் முழுவதும் உருவான மின்னணு கழிவுகளின் அளவு 5 கோடி டன். இவை அனைத்துமே கம்ப்யூட்டர்கள், சுமார்ட் போன்கள், டேப்லெட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், இவற்றில் 20 சதவீதம் பொருட்கள் மண்ணில் புதைக்கப்படுவதால் வரும் காலங்களில் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நெகிழி கழிவால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, 60 முதல் 100 சதவீதம் வரை, இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு தரக்கூடிய ஈயம், பாதரசம் போன்ற ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தான் வெளியாகின்றன.

தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 3 முதல் 4 டன் வரையிலான மின்னணு கழிவுகள் சேர்வதால் அதனை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக இ - வேஸ்ட்டுகளை கொண்டு சிலைகள் அமைத்து மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இ - வேஸ்ட்டுகளை எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும், 95 சதவீத மாசு ஏற்படும் என்றும், இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இ - வேஸ்ட்யை மறுபயன்பாடு செய்வதற்கான ஆய்வுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மக்கள் நினைத்த மாத்திரத்தில் மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களை வாங்காமல், தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் இ - வேஸ்ட்டுகள் உருவாவதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related Stories: