டெல்லி கலவரத்தின் பின்னணியில் பாஜகவின் திட்டமிட்ட சதி உள்ளது, தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இத்தகைய அரசியல் சூழ்ச்சி : சோனியா காந்தி கடும் கண்டனம்

டெல்லி : டெல்லியில் நடைபெற்றுள்ள கலவரமும் சூறையாடலும் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதனை தெரிவித்தார்.

Advertising
Advertising

பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில்  நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு

இந்நிலையில்  காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும் டெல்லி தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் மனதார வேண்டுவதாகவும் சோனியா குறிப்பிட்டார். தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், கலவர பகுதிகளில் துணை ராணுவ படையினரை ஏன் அழைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் பாதுகாப்பு படையினரை வடகிழக்கு குவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

சோனியா காந்தி பேசியதாவது,

*சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

*டெல்லி கலவரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்துகின்றனர். கலவரத்தின் பின்னணியில் பாஜகவின் திட்டமிட்ட சதி உள்ளது.பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ராவின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

*டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சருமே பொறுப்பு

*டெல்லியில் கலவரத்தை தடுக்க முதலமைச்சராக கெஜ்ரிவாலும் தோல்வி அடைந்துவிட்டார்.கலவரம் பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் ஏன் செல்லவில்லை. டெல்லியில் கலவரம் மிக மோசமாக உள்ளதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கலவரம் தொடர்பான உளவுத்துறையின் தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன. கலவரம் பற்றி எதுவும் பேசாமல் மத்திய அமைச்சர்கள் மவுனம் காத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வெறுப்பு அரசியலை டெல்லி மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

*டெல்லி கலவரத்தை ஒடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது.

*டெல்லியில் கலவரம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.

*வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.இவ்வாறு சோனியா காந்தி பேட்டியில் குறிப்பிட்டார்.

Related Stories: