டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்

டோக்கியோ:  ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கி தவிக்கும் 138 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள யோகோமா துறைமுகம் அருகே கடந்த 3ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என 3,711 பேர் இருந்தனர். இவர்களில் 132 ஊழியர்கள், 6 பயணிகள் என ெமாத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். இந்த கப்பலில் இருந்த இந்தியர்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கப்பலில் மீதம் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. இதன்படி அவர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகத்தின் டிவிட்டர் பதிவில், “டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களின் ஒப்புதல், மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள், கப்பலில் உள்ள மருத்துவ குழுவினரின் அனுமதி ஆகியவற்றின் அடிப்படையில் கப்பலில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். இது தொடர்பான தகவல் அவரக்ளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related Stories: