துளித் துளியாய்

* ‘நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் விளையாடியபோது இருந்த நிலையே வேறு. ஒரு அணியை உருவாக்கும்போது வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அணியில் ஒரேயடியாக பல மாற்றங்களை மேற்கொள்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொரு வகை கிரிக்கெட் போட்டிக்கும் தனிச்சிறப்பான வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், கே.எல்.ராகுல் தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்க வேண்டும்’ என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

* டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்திய துப்பாக்கிசுடுதல் வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் பதக்கங்களை வெல்வார்கள் என ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ‘சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி மொத்தம் 34,357 ரன் குவித்து படைத்த சாதனையை யார் முறியடிக்கப் போகிறார்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்’ என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

* கடந்த ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்குப் பிறகு களமிறங்காமல் ஓய்வெடுத்து வரும் நட்சத்திர வீரர் எம்.எஸ்.டோனி எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்க உள்ளார். இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் மார்ச் 2ம் தேதி பயிற்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப் டவுனில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிப்பதால், தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே மைதானத்தில் தான் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஆஸி. அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரான் பேங்க்ராப்ட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* குரோஷியா அணிக்கு எதிராக ஜாக்ரெப் நகரில் நடௌபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான (மார்ச் 6-7) இந்திய அணியில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ் தக்கவைக்கப்பட்டுள்ளார். சுமித் நாகல், பிரஜ்னேஷ் குணேஷ்வரன், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களிலும் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா இரட்டையர் ஆட்டத்திலும் விளையாட உள்ளனர்.

* கடப்பாவில் சண்டிகர் - அருணாச்சல் மோதிய யு-19 மகளிர் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த சண்டிகர் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அருணாச்சல் 9 ஓவரில் 25 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (8 பேர் டக் அவுட்). சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் 12 ரன் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டையும் முழுமையாக அள்ளி அசத்தினார்.

* காமன்வெல்த் துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை போட்டி 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் அணிகள் பெறும் பதக்கங்கள் இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பதக்கப்பட்டியலில் சேர்க்கப்படும்.

Related Stories: