×

முன்கூட்டியே பணத்தை தொகுத்து பெற்ற பிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.1 முதல் முழு பென்ஷன்

* 6.3 லட்சம் பேருக்கு பலன்
* மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிஎப் மாதாந்திர பென்ஷன் தொகையில் குறிப்பிட்ட பகுதியை முன்கூட்டியே தொகுத்து பெற்றுக்கொண்ட 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 15 ஆண்டுக்கு பிறகு முழு ஓய்வூதியம்  வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கிடைக்கும் என, தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, பிஎப் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2008 செப்டம்பர் 26ம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதிய தொகையை முன்கூட்டியே தொகுத்து பெற அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி பிஎப் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பென்ஷன் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை சில ஆண்டுகளுக்கு முன்கூட்டியே தொகுத்து முன்பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு ஓய்வூதியத்தை தொகுத்து பெறுவதற்கான அனுமதி 2008 செப்டம்பர் 26ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டு விட்டது. ஓய்வூதியத்தை தொகுத்து பெற்றவர்களுக்கு 15 ஆண்டுக்கு பிறகு முழு பென்ஷன் கிடைக்கும். இந்நிலையில், ஓய்வூதியத்தை தொகுத்து பெற்றவர்களுக்கு முழு பென்ஷன் வழங்க, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கடந்த 20ம் தேதி, இந்த பென்ஷன் திட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, முன்கூட்டியே ஓய்வூதியத்தை தொகுத்து பெற்றவர்களுக்கு முழு பென்ஷன் கிடைக்கும். அதாவது, 2005 ஏப்ரல் 1ம் தேதி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதியை தொகுத்து பெற்றிருந்தால், அவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து முழு பென்ஷன் கிடைக்கும். இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இதன் மூலம் 6.3 லட்சம் பிஎப் ஓய்வூதியதாரர்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து முழு பென்ஷன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

Tags : pensioners ,PF , Full pension, PF pensioners ,accumulated cash in advance
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்