×

அரசின் தவறான நடவடிக்கையால் தடுமாறும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வீழ்ச்சிப்பாதையில் செல்லும் ‘டாலர் சிட்டி’: 1000 கோடிக்கு மேல் இழப்பால் தவிப்பு: 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கை காரணமாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வீழ்ச்சிப் பாதையில் செல்கின்றன. இதனால் அங்கு பணிபுரியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பனியன் நகரம், ஜவுளி நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தருவதால் ‘டாலர் சிட்டி’ என்ற பெயர் பிரபலம். திருப்பூரில் சில ஆயிரம் ரூபாய்  முதலீட்டில் இயங்கும் குறு நிறுவனம் முதல் ஆயிரம் கோடி  ரூபாய் முதலீட்டில்  இயங்கும் பெரு நிறுவனங்கள் வரை பல்லாயிரக்கணக்கான  பின்னலாடை மற்றும்  சார்பு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் 1,200 ஏற்றுமதி சார் உற்பத்தி  நிறுவனங்கள், 3,000 உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள்,  850 பின்னலாடை நிறுவனங்கள், 400 சாய ஆலைகள், 50 பிளீச்சிங் யூனிட்கள், 600  பிரிண்டிங் யூனிட்கள், 400 எம்பிராய்டரி யூனிட்கள், 1100 சார்பு  யூனிட்கள், 750 காம்பேக்டிங் யூனிட்கள் என சுமார் 8,350 பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான ஜாப் ஒர்க் மற்றும் சார்பு நிறுவனங்களும்  திருப்பூரில் இயங்குகின்றன. அவற்றில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 28%,  பின்னலாடை ஏற்றுமதியில் சுமார் 46 சதவீதத்திற்கும் அதிகமான  பங்களிப்பை திருப்பூர் நகர பின்னலாடை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்நிறுவனங்கள், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்  வருவாய் ஈட்டி வந்தன. இந்நிலையில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும்  ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கை காரணமாக திருப்பூர் பின்னலாடை  உற்பத்தி பெரும் சரிவை சந்தித்து வருகிறது. தொடர் நலிவு காரணமாக ஆயிரக்கணக்கான  சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது இயங்கி வரும் பெரு, சிறு, குறு  நிறுவனங்களும் கடும் நெருக்கடிக்கு மத்தியில்தான் இயங்குகின்றன.  சரிவுப்பாதையில் செல்லும் இந்த நிறுவனங்களை மீட்க மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை  எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், மத்திய அரசு கைகொடுக்கவில்லை. மத்திய அரசின் தொடர்ச்சியான  பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வரி விதிப்புகள் திருப்பூர் பின்னலாடை  உற்பத்தி துறையை மென்மேலும் சரிவை நோக்கி தள்ளுகிறது என தொழில்துறையினர்  கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதிக்கான வரி விதிப்பு விகிதங்களால் இலங்கை, வங்காளதேசம், கம்போடியா, எத்தியோப்பியா போன்ற சிறிய நாடுகளுடன் கூட போட்டி  போட முடியாமல் திணறுகின்றன. பின்னலாடைக்கான முக்கிய  சந்தைகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான ஏற்றுமதி  வர்த்தகத்தில் அந்நாட்டு அரசாங்கங்கள் சுதந்திரமான போக்கை  கடைபிடிக்கின்றன. குறைவான ஊதியம் மற்றும் வரி விகிதங்களால் போட்டி நாடுகள்  மிகக்குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்வதால் திருப்பூர் நிறுவனங்கள்  அவற்றுடன் போட்டி போட முடிவதில்லை. இதேபோல் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த  சலுகைகள் குறைக்கப்பட்டதும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத ஊக்கத்தொகை கடந்த ஆண்டு மார்ச் முதல் முன்தேதியிட்டு வாபஸ் பெறப்படுவதாக கடந்த மாதம் 30ம் தேதி திடீரென மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருந்த திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு இதனால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நடப்பாண்டில் 2 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி சரிந்துள்ளது. இதனால் தொழிலை  தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு பின்னலாடை நிறுவனங்கள்  வீழ்ச்சியடைந்து வருகின்றன. வரிச்சலுகைகள், ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை, அமெரிக்கா  மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சுதந்திரமான வர்த்தகம் போன்றவற்றை  நடைமுறைப்படுத்தினால் மட்டுமே திருப்பூர் நிறுவனங்கள் மீண்டும் மறுமலர்ச்சி  அடையமுடியும் என்ற நிலை உள்ளது. இல்லையேல், 6 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பது உறுதி என்ற பரிதாப நிலை திருப்பூரில் தொடர்கிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கபொதுச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: திருப்பூர்  பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில  அரசுகள், ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை  (ஆர்.ஒ.எஸ்.சி.டி.எல்.) 1,300 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்த தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பின்னலாடை  ஏற்றுமதியாளர்களும் உலக பின்னலாடை சந்தையில் நிலவும் போட்டிகளை கண்காணித்து  விலைகளை குறைத்து விற்பனை செய்கிறோம்.

ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை உடனே  கிடைக்காமல் காலதாமதம் ஆவதால் மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை.  தொழில் நலிவடைகிறது. கடன்தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.  தொழிலாளர்களுக்கு சம்பளம் நிலுவை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிதாக  கடன் வாங்கும்போது வட்டித்தொகை அதிகரிக்கிறது. இப்படி பல இடர்பாடுகளை பின்னலாடை நிறுவனங்கள் சந்திக்கின்றன. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த  2016-2017ல் ₹26 ஆயிரம் கோடியாக இருந்தது. இது, 2017-2018ல் ₹24,000 கோடியாக குறைந்துவிட்டது. தொழில் நெருக்கடி  காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி குறைகிறது. உற்பத்தி செலவினங்கள்   அதிகரித்துள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் பாக்கி வைத்துள்ள ஆர்.ஒ.எஸ்.சி.டி.எல். நிலுவை தொகையை உடனடியாக வழங்கினால்தான் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத ஊக்கத்தொகையை மத்திய அரசு முன்தேதியிட்டு வாபஸ் பெற்றதால்  ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு.
* வங்கதேசம், இலங்கை, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் தயாராகும் பின்னலாடை.
* அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் சந்தைகளுக்கு தடையற்ற, வரியற்ற வர்த்தகம் இல்லாதது.
* திருப்பூரில் பின்னலாடை தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும்.
* ஊக்கத்தொகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
* முக்கிய சந்தைகளாக உள்ள நாடுகளுடன் வரியற்ற வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

இலங்கை, கம்போடியாவுக்கு இடம் பெயரும் நிறுவனங்கள்
தொழில் போட்டியை சமாளிக்க திருப்பூரை சேர்ந்த பல நிறுவனங்கள் இலங்கை, கம்போடியா போன்ற நாடுகளில் தங்கள் புதிய ஆலையை நிறுவி வருகின்றன. இப்படி இலங்கையில் தனது ஆலையை நிறுவியுள்ள பின்னலாடை நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், திருப்பூரில்  உள்ள என் கம்பெனிக்கு இந்த ஆண்டு ஆர்டர் பாதியாக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இலங்கை யில் தொடங்கியுள்ள கம்பெனிக்கு ஆர்டர் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் திருப்பூரில் தயாராகும் பின்னலாடையின் விலை அதிகம் என்பதுதான். மத்திய அரசு தொடர்ந்து வரிச்சலுகைகளை அளித்தால் மட்டுமே திருப்பூரில் பின்னலாடை தொழிலை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோகும். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான திருப்பூரை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags : Tirupur ,Dollar City ,companies , Government action, stumbling Tirupur, backward companies, going downhill, Dollar City
× RELATED மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி