காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகம் திட்டவட்டம் மேகதாது அணை கட்டும் பேச்சுக்கு இடமில்லை: மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதுடெல்லி:  காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 5வது கூட்டம் கடந்த ஓராண்டுக்கு பிறகு டெல்லியில் மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நான்கு மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 3 மணி வரை நான்கு மணி நேரம் நடந்தது. இதையடுத்து கூட்டத்தில் நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் அளித்த பேட்டி: கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீர் பங்கீடு, கோடைகாலத்தின் போது ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் காவிரியின் கிளையான தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள சமரச குழு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் முக்கியமாக மேகதாதுவின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தற்போது ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கு கண்டிப்பாக தமிழகம் அனுமதிக்காது. அதற்கான பேச்சுக்கே இடம் கிடையாது. இதுதொடர்பாக வழகப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இங்கு எந்த ஒரு விவாதமும் மேற்கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கை புதுவை மாநிலத்தின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்தது.

தலைவர் இல்லாத ஆணையம்

நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு என இரண்டாகப் பிரித்து தனித்தனியாக 9 உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.  2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில்தான் கூட்டம் நடந்துள்ளது. ஆணையத்திற்கு என்று தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: