4 நாட்களாக மலைபோல் தேக்கம் நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் இயந்திரங்களை கொண்டு அறுவடை நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே வண்டாம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகள் அனைத்தும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்படாமல் மலைபோல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விவசாயிகள் கேட்டபோது சாக்கு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி முதல் நேற்று வரையில் (இடையில் ஞாயிறு விடுமுறை தவிர) நெல் கொள்முதல் நடைபெறாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் நிலைய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் 2 ஆயிரம் சாக்குகள் உடனே அந்த கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது கொள்முதல் கணினி மூலம் பதிவு செய்யப்படும் முறை இருந்து வருவதால்  மின்தடை காரணமாக நேற்று மாலை வரையில் கொள்முதல் நடை பெறவில்லை. சாக்குகள் பற்றாக்குறை என்று பொய் காரணங்களை கூறாமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: