கும்பகோணம் மாவட்டம் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரிய மனு தள்ளுபடியானது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த புதியராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென்பது கடந்த 25 ஆண்டு கால கோரிக்கை. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு போக்குவரத்து கழகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட மருத்துவமனை, மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம், ஆடுதுறை நெற்களஞ்சியம் என மாவட்டத்திற்குரிய அனைத்து அம்சங்களும் கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளன. எனவே, தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

Advertising
Advertising

இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தபோது, ‘‘மனுதாரர் தரப்பு கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்றனர். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் வக்கீல் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: