×

3வது நாளாக வன்முறை: டெல்லி கலவர பலி 13ஆக உயர்வு: 70 பேருக்கு குண்டு காயம்: துணை ராணுவம் குவிப்பு

புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக டெல்லியில் தொடர்ந்து  கலவரம் வெடித்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்து  விட்டது. குண்டு காயத்துடன் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டெல்லியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு(சிஏஏ) எதிராகவும்,  ஆதரவாகவும்  போராட்டம் நடத்திய இரு குழுக்களுக்கிடையே  மோதல் ஏற்பட்டு  கலவரம் வெடித்தது. இரு தரப்பிலும் கற்களை கொண்டு வீசி  தாக்குதல் நடத்தினர். அருகிலுள்ள வாகனங்கள், ஆட்டோக்கள், சைக்கிள்களுக்கும்  தீ வைக்கப்பட்டது. அதோடு, கையில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் ஒருவர் வான்நோக்கி சுட்டு பீதியை ஏற்படுத்தினார். இந்த வன்முறையால் வடகிழக்கு  டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், பஜன்புரா மற்றும் சாந்த்பாக் பகுதிகள்  போர்களம் போன்று காட்சியளித்தன. எங்கு பார்த்தாலும் சாலையில் கற்கள் சிதறி  கிடந்தன.

கலவரத்தில் சாந்த்பாக்கில் டெல்லி போலீசை சேர்ந்த ரத்தன்  லால் என்கிற தலைமை காவலர் உட்பட நேற்றுமுன்தினம் 5 பேர் பலியானார்கள்.  கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வடகிழக்கு டெல்லியின் 10க்கும் மேற்பட்ட  பகுதிகளில் மார்ச் 24ம் தேதி வரை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில்,  நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது. மவுஜ்பூர் பகுதியில் உள்ள  கடைகளுக்குள் சென்ற கும்பல் ஒன்று கடைகளை மூடுமாறு கூறி அச்சுறுத்தியது.  இதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. கற்கள் வீசி தாக்குதல்  நடத்தப்பட்டதோடு, அங்கிருந்த கடைகள் சூறையாடப்பட்டது. பஜன்புரா,  சந்த்பாக், காராவால்நகர் பகுதியில் அதிக அளவில் வன்முறை நடந்தது. மஜ்பூர்,  பாபர்பூர், விஜய்பார்க், யமுனா விகார் பகுதிகளிலும் வன்முறை பரவியது. சிஏஏ  எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இருதரப்பினரும்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். சந்த்பாக் பகுதியில் கடைகள் கொளுத்தப்பட்டன.  கோகுல்புரி பகுதியில் டயர் மார்க்கெட் தீ வைத்து எரிக்கப்பட்டது. கையில்  இரும்பு கம்பி, கம்புகளுடன் வீதிவீதியாக வந்த கும்பல் இந்த வன்முறையில்  ஈடுபட்டது. இதை தடுக்க போலீசார் முயற்சிக்கவில்லை. கோகுல்புரியில் இரண்டு  தீயணைப்பு வண்டிகள் எரிக்கப்பட்டன. பைக் ஷோரூம் கொளுத்தப்பட்டது. அதில்  இருந்த பைக்குகள் பற்றி எரிந்தன. மாலையிலும் சாந்த்பாக் பகுதியில் கலவரம்  ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில்  வன்முறை பரவியது. இருதரப்பினரும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானோர்  எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. 48 போலீசார் உள்பட 150க்கும் மேற்பட்டோர் காயம்  அடைந்தனர். இதில் 70 பேர் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை இன்னும்  உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கலவரத்தை கட்டுப்படுத்த  டெல்லி போலீசாருக்கு உதவ, துணை ராணுவப்படையும் வரவழைக்கப்பட்டு  ஒட்டுமொத்தமாக சுமார் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு  டெல்லியின் பஜன்புரா மற்றும் குரேஜி காஸ் ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு  நடத்தினர். கலவரம் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி  போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கலவரத்தை  கண்டித்து ஜமியா மிலியா பல்கலை மற்றும் ஜேஎன்யு பல்கலையின் இந்நாள்  மற்றும் முன்னாள் மாணவர்கள், போலீஸ் தலைமையகம் முன்பாக திரண்டு போராட்டம்  நடத்த அழைப்பு விடுத்தனர். இதனால் சம்மந்தப்பட்ட 9 மெட்ரோ ஸ்டேஷன்கள்  மூடப்பட்டன.  
டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை  அமைச்சர் அமித்ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கவர்னர் அனில் பைஜால்,  முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து  கொண்டனர். அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவத்தை  வரவழைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. பிற்பகலில் மீண்டும் கலவரம்  வெடித்ததால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும்  கலவரம் கட்டுக்குள் வரவில்லை. வடகிழக்கு டெல்லியில் பதற்றம்  நீடிக்கிறது. அமைதியை கொண்டு வர துணை ராணுவப்படையினர், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மவுஜ்பூர்  பகுதியில் வெடித்த வன்முறையை படம்பிடித்துக்கொண்டிருந்த ஜேகே செய்தி  சேனலை சேர்ந்த  பத்திரிகையாளர் ஆகாஷ் என்பவர் கும்பலால்  துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இதேபோல், வடகிழக்கு டெல்லியில் வேறு பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த என்டிடிவி செய்தியாளர் அரவிந்த் குணசேகரை ஒரு கும்பல் தாக்கியது. இதனை தடுக்க முயன்ற அவரது சகாவான சவுரப் சுக்லாவையும் கும்பல் தடியால் தாக்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடி விழுந்தது. இதேபோன்று, மற்றொரு பகுதியில் இருந்த என்டிடிவி செய்தியாளர் மரியம் அலவி, சீனிவாசன் ஜெயினுடன் இணைந்து  செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது அவர்களை கும்பல் தாக்கியது. இதில், இருவர் காயமடைந்தனர்.

தேர்வுகள் மாற்றம்
வடகிழக்கு டெல்லி பகுதிகளில்  உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  அரசு விடுமுறை அறிவித்தது.  நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து  செய்யப்பட்டுள்ளன. இதனிடையே,  வன்முறை பகுதிளில் தேர்வு மையங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,  சிபிஎஸ்இ தேர்வு அட்டவணைையை  மாற்றக்கோரியும் தனியார் பள்ளிகள் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் இந்த வழக்கை விசாரித்தார்.  
அப்போது சிபிஎஸ்இ தேர்வுகளை வடகிழக்கு டெல்லி பகுதி பள்ளிகளுக்கு மட்டும்  மாற்றி அமைக்க வேண்டும் அல்லது பக்கத்து பகுதி பள்ளிகளுக்கு தேர்வு  மையங்களை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிைடயே தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்களால் மறிக்கப்படும் ஆம்புலன்ஸ்கள்

* போராட்டக்காரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்களைத் தடுப்பதால்,  மோதலில் காயமடைந்தவர்களை பைக்குகள் மற்றும் வேன்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
* வன்முறையில் காயமடைந்தவர்களை  முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ஜிடிபி மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
* வன்முறையை கட்டுப்படுத்த போதுமான அளவில் போலீஸ் படைகள் இல்லாததே நிலைமை மோசமாக முக்கிய காரணம் என டெல்லி போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளித்துள்ளனர்.
* ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று மரியாதை செலுத்திய பின், வன்முறையை கைவிட அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

Tags : riots ,Delhi , Violence, Delhi riots, killing 13, rise, paramilitary force
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...