நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு திட்டமிட்டபடி தூக்கு நிறைவேற்றப்படுமா?: மத்திய அரசு மனு மார்ச் 5க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதே விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்த  மேல்முறையீடு வழக்கை வரும் 5ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது.டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக மத்திய  அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நட்ராஜ் தனது வாதத்தில், “நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதை தடுத்து  நிறுத்தும் விதமாக அவர்களது தரப்பில் ஏதேனும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது” என தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே, மார்ச் 3ம் தேதி, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  மத்திய அரசு தொடர்ந்த வழக்கை வரும் 5ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் தடை ஏற்படும் என்ற நிலை எழுந்துள்ளது.

Related Stories: