×

ஆந்திராவில் 2 கோடி மதிப்புள்ள செம்மரம் கடத்திய தமிழர்கள் உள்பட 29 பேர் கைது

திருமலை: ஆந்திராவின் நாகசாமிபல்லியில் உள்ள வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டி கடத்துவதாக கடப்பா மாவட்ட வன அலுவலர் குரு பிரபாகருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு  சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் செம்மரங்களை வெட்டி மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் மற்றும்  பொதட்டூர் ஒய்எம்ஆர் காலனியை சேர்ந்த மல்லேஷ், மைதுக்கூரை  சேர்ந்த சுப்பாராயுடு என்பதும் தெரியவந்தது. மற்றவர்களின் பெயர்களை போலீசார் தெரிவிக்கவில்லை.கைதானவர்களிடம் இருந்து 47 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருப்பதி அடுத்த பீமவரம் பகுதியில் செம்மரக்கட்டை கடத்துவதாக அதிரடிப்படை காவல் நிலைய எஸ்பி ரவிசங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஆர்.எஸ்.ஐ. வாசு தலைமையில் போலீசார் மற்றும்  வனத்துறையினர் பீமவரம் அருகே வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த கும்பல், போலீசாரை பார்த்தவுடன் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். விசாரணையில், சேலத்தை  சேர்ந்த சேட்டு(25), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார்(24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 25 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனங்களின் மதிப்பு ₹2 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Andhra Pradesh ,Tamils , sheep smuggled , Andhra Pradesh,Tamils
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...