பீமா-கோரேகாவ் கலவர வழக்கு தொடர்பாக சரத் பவாரை அழைத்து விசாரிக்க கமிஷன் முடிவு: வழக்கறிஞர் தகவல்

புனே: கடந்த 2018ம் ஆண்டு புனே அருகே பீமா-கோரேகாவில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் அழைத்து விசாரிக்க விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது. கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி பீமா-கோரேகாவ் யுத்தத்தின் 200வது வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றபோது அந்த பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது. அதற்கு முந்தைய நாளான 2017 டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற எல்கார் பரிஷத்  மாநாட்டில் பங்கேற்ற இடதுசாரி பிரமுகர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதுதான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று புனே போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.என்.பட்டேல் தலைமையிலான இரண்டு உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிஷன் ஒன்றை முந்தைய தேவேந்திர பட்நவிஸ்  தலைமையிலான பாஜ அரசு அமைத்தது.  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடந்த பிப்ரவரி 18ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, வலதுசாரி தலைவர்கள் மிலிந்த் ஏக்போடே மற்றும் சம்பாஜி பிடே இருவரும் பீமா-கோரேகாவில் கலவரம் ஏற்படுவதற்கான ஒரு  சூழ்நிலையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், விவேக் விச்சார் மஞ்ச் என்ற சமூக அமைப்பு ஒன்றின் உறுப்பினர் சாகர் ஷிண்டே கடந்த வாரம்  விசாரணை கமிஷனில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அதில், சரத் பவார் கடந்த பிப்ரவரி 18ம் தேதி அளித்த பேட்டியில்  பீமா-கோரேகாவ் கலவரம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருப்பதால் அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில், பீமா-கோரேகாவ் கலவர வழக்கு தொடர்பாக சரத் பவாரை நேரில் அழைத்து விசாரிக்க விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது. சரத் பவார் ஏற்கனவே கடந்த 2018 அக்டோபர் 8ம் தேதி கமிஷன் முன்பு அபிடவிட் ஒன்றை  தாக்கல் செய்திருப்பதாகவும் எனவே அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணை கமிஷன் தலைவர் நீதிபதி ஜே.என்.பட்டேல் கூறியதாக விசாரணை கமிஷன் வழக்கறிஞர் ஆஷிஷ் சாத்புதே நேற்று தெரிவித்தார்.இதற்கான சம்மன் சரத் பவாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், கமிஷனின் இறுதிக்கட்ட விசாரணையின் போது சரத் பவார் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும் ஆஷிஷ் சாத்புதே கூறினார்.

Related Stories: