ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீங்குவது எப்போது?: உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க கோரிக்கை

புதுடெல்லி: தமிழகத்தில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.அப்பாவு, அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளையும், எம்.அப்பாவு  69 ஆயிரத்து 541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, அவற்றை  எண்ணியும் முடித்துள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை  விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,  உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.  இதையடுத்து திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நீதிபதி அருண் மிஸ்ரா முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “இந்த வழக்கு ஏற்கனவே ஐந்து முறை பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படவில்லை.  உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் எங்களது தரப்புதான் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே நீதிமன்றம் நாளை (இன்று) வழக்கை விசாரிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் சாராம்சம் மற்றும் நிலவரங்கள் எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் மீண்டும் பட்டியலிடப்படும் போது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை நாளை (இன்று) நேரம் இருக்கும்  பட்சத்தில் வழக்கை விசாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: