இரட்டிப்பு பணம் தருவதாக 90 கோடி மோசடி சென்னை உள்பட 9 இடங்களில் அமைத்த கிளை அலுவலகம் மூடல்

சேலம்:  சேலம்  தாதகாப்பட்டி குமரன் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51). இவரது மகன் வினோத்குமார், ஓமலூர் பக்கமுள்ள மானத்தாள் தாண்டவனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(49). இவர்கள் மூவரும்  இணைந்து சேலத்தில் ‘‘ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை  நடத்தினர்.  ₹1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ₹20ஆயிரம் வழங்கப்படும், இரட்டிப்பு பணம் தரப்படும் என  ஆசை வார்த்தை  கூறி 9 ஆயிரம் பேரிடம் ரூ.90 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியன் ஆகியோரை  கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி சென்னை, திண்டுக்கல், ஊட்டி, நாகர்கோயில், காரைக்குடி, திருவண்ணாமலை, தலைவாசலில் (2 இடங்கள்),கோபி ஆகிய 9 இடங்களில் கிளை அமைத்து பணம் வசூலில்  ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கிளை அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு, அந்த மோசடி அலுவலகங்கள்  மூடப்பட்டுள்ளது. இந்த கிளை அலுவலங்களில் எத்தனை பேரிடம் பணத்தை பெற்றுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: