உள்ளாட்சி தேர்தல் சிசிடிவி விவகாரம் தேர்தல் ஆணைய மேல்முறையீடு மனு: உச்ச நீதிமன்றம் 4 வாரம் ஒத்திவைப்பு

புதுடெல்லி:  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கிடையில் திமுக சார்பில் கடந்த  20ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “உள்ளாட்சி தேர்தலின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தாக்கல்  செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், அதேப்போல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் நீதிமன்ற நீதிபதி அனில் லக்சுமன் ஹன்சாரே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பித்த உத்தரவில், “உள்ளாட்சி தேர்தலில் சிசிடிவி கேமரா காட்சிகளை  தாக்கல் செய்ய வேண்டும் என்ற வழக்கை நீதிமன்றம் 4 வாரத்திற்கு ஒத்திவைப்பதாகவும், அதேப்போல் மாநகராட்சி, நகராட்சி ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடுவது தொடர்பான வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவது  தொடர்பான கோரிக்கையை அலுவலக அதிகாரியிடம் சென்று தான் மனுதாரர் முறையிட வேண்டும்” என உத்தரவிட்டார்.

Related Stories: