×

சிலை கடத்தல் வழக்கில் 41 ஆவணங்கள் திடீரென மாயமானது எப்படி?: விளக்கம் தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆட்சி செய்த பாண்டியர்கள், சோழர்களின் காலத்தில் தமிழகத்தில் இருந்த விலை மதிப்பற்ற 1000 ஆண்டுகள் பழமையான  நடராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மியூசியத்திலும், பல்வேறு வெளிநாடுகளிலும், இந்தியாவில் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் உள்ளன. இந்த சிலை கடத்தல் சம்பவங்களில் அரசியல்வாதிகள், போலீஸ் உயரதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் திடீரென இந்த சிலை கடத்தல் தொடர்பான 41 முக்கிய வழக்குகளின் குற்ற ஆவணங்கள் மாயமாகியுள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ள பெரும்புள்ளிகளை தப்பிக்க வைப்பதற்காக போலீசார் வழக்கு ஆவணங்கள் மாயமாகி விட்டதாக அறிவித்து வழக்கையும் முடித்து வைத்துள்ளனர். வடக்கு மண்டலத்தில் 20 வழக்குகள், தெற்கு, மேற்கு மண்டலங்கள் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் என தலா 7 வழக்குகள் என மொத்தம் 41 குற்ற ஆவணங்கள் மாயமாகி விட்டதாக தெரிகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் திருடுபோன விவகாரத்தில் செயல் அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி பால் ஆணையம்  அறிக்கை அளித்தது. ஆனால், அது தற்கொலை எனக்கூறி இந்து சமய அறநிலையத்துறை வழக்கை முடித்து வைத்துவிட்டது. அதன்பிறகு அந்த வைரவேல் கோயில் உண்டியலில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சிலைகள் மட்டுமின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எனவே, 41 வழக்குகளின் குற்ற ஆவணங்கள் மாயமானது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். முக்கிய சிலை திருட்டு  வழக்குகளை முடிக்கக்கூடாது என்றும்  போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணனன், ஆர்.ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  மனுதாரர் கடந்த 2018ல் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது இதுவரை எந்த அதிகாரியும் பதில் தரவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போதுதான் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் தமிழக அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்களை ஆய்வு செய்து பதில் தர கால அவகாசம் வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்ற ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Statue abduction , Statue abduction, 41 documents, how is magic? , Description grade, highcourt, directive
× RELATED சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்...