பேராசிரியர்கள், போலீசார் கண்ணில் மண்ணை தூவி மருத்துவ கல்லூரியில் 2 ஆண்டாக படித்த மோசடி மாணவன்

* தந்தையிடமும் சிபிசிஐடி அதிரடி விசாரணை

* 2018-19ம் ஆண்டு நடந்த நீட் தேர்விலும் முறைகேடு செய்தார்

சென்னை: 2018-19ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று, கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவன் மற்றும் அவரது தந்தையை பிடித்து சிபிசிஐடி போலீசார் வசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் நடந்த மோசடி குறித்து விரிவான விசாரணை சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் உத்தரவின் படி சிபிசிஐடி ஐஜி சங்கர் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். அப்போது, தமிழகம் முழுவதும் பலர் ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. கடந்த 2019-20 ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி தற்போது தலைமறைவாக உள்ள 2 பெண்கள் உட்பட 10 பேரின் புகைப்படங்களை கடந்த 11ம் தேதி சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் நீட் தேர்வு மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது மருத்துவம் படித்து வரும் நபர்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பட்டது.

அதன்படி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் தேர்வாகி படித்து வரும் நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சென்னை மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த தனுஷ்குமார் என்ற மாணவனின் புகைப்படமும் , நீர் தேர்வு எழுதிய மாணவனின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. உடனே சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி விசாரணை நடத்தினர். அப்போது தனுஷ்குமார் பீகாரில் உள்ள நீர் தேர்வு மையத்தில் இந்தி மொழில் தேர்வு எழுதி முதல் 50 இடங்களுக்குள் வந்தது தெரியவந்தது. ஆனால் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் தனுஷ்குமாருக்கு இந்தி மொழி தெரியாது என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கடந்த 2018-19ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் தனுஷ்குமார் மீது பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவன் தனுஷ்குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் கடந்த 2018-19ம் ஆண்டு நடந்த  நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தனுஷ்குமாரின் தந்தை மூலம் பல லட்சம் பணத்தை பீகாரில் உள்ள ஒரு நீட் சென்டருக்கு கொடுத்து தனது மகனை போன்று மோசடியாக ஒருவரை தேர்வு எழுதி வெற்றி பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக இருந்த சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து வந்த தனுஷ்குமார் மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 2018-19ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு முறைகேடு குறித்தும், அதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: