×

அமெரிக்க போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு 21,000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து: 1.5 லட்சம் கோடி எரிபொருள் இறக்குமதிக்கு ஒப்புதல்: டெல்லியில் மோடி-டிரம்ப் பேச்சுக்கு பின் முடிவு

புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையில் ராணுவம், எரிசக்தி துறைகளில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிரம்ப்-மெலானியா தம்பதியினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து அளிக்க, 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் நேற்றிரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த டிரம்பை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அதிபர் டிரம்ப், மொடேரா ஸ்டேடியத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் குவிந்து டிரம்பை வரவேற்றனர்.

பின்னர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த டிரம்ப் தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்து தங்கினர். சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று காலை அதிபர் டிரம்ப், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க ராஷ்டிரபதி பவன் வந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. குதிரைப்படையினர் புடை சூழ பீஸ்ட் காரில் அழைத்து வரப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முப்படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து, மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதிக்கு டிரம்ப் தம்பதியர் சென்றனர். அங்கு காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். அதிபர் டிரம்ப்புக்கு, மார்பளவு காந்தி சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் இணைந்து அங்கு மரக்கன்று நட்டனர்.

இதையடுத்து, சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வான பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை ஐதராபாத் இல்லத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ரூ.21,000 கோடி மதிப்பில் அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான 2 ஒப்பந்தம் மற்றும் ரூ.1.5 லட்சம் கோடி எரிசக்தி இறக்குமதி உள்ளிட்ட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தீவிரவாதத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். மேலும், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு வலுப்பெற்றதாகவும் அதிபர் டிரம்ப்பும், இன்னும் பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடியும் கூட்டாக அளித்த பேட்டியில் குறிப்பிட்டனர்.

பின்னர், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது விரைவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் தனது குடியரசு கட்சியே வெற்றி பெறும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்-மெலானியா தம்பதியினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரமாண்ட இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் சிறப்பு விருந்தினர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருந்தை தொடர்ந்து, டிரம்ப்புக்கு தாஜ்மகால் சிலை மற்றும் காஷ்மீர் தரைவிரிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசாக வழங்கினார். இதையடுத்து, 2 நாள் இந்திய பயணம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு அதிபர் டிரம்ப்-மெலானியா தம்பதியினர் ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

‘மறக்க முடியாத பயணம்’அதிபர் டிரம்ப் பரவசம்
கூட்டு பேட்டியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளதன் மூலம் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டுமென இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இதற்கான முயற்சியாக, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்களை அகற்றுவதில் அமெரிக்கா ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. நான் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 60 சதவீதம் அதிகரித்துள்ளது. உயர் தரமிக்க அமெரிக்க எரிசக்தியின் ஏற்றுமதி 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உறவு மேலும் நீட்டிக்கப்படும். இந்திய சுற்றுப்பயணம் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்தது. குறிப்பாக, மொடேரா மைதானத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். ஒவ்வொரு முறை பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தபோது எழுந்த ஆரவாரம் நன்றாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து என்னை வரவேற்ற அந்நிகழ்ச்சியை வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. கொரோனா வைரசுக்கு எதிராக போராட்டத்தில் உலகம் வெல்லும். விரைவில் அந்த நோய் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

மாட்டிறைச்சி இல்லை
ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட பிரமாண்ட விருந்தில் பல ஸ்பெஷல் உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. அசைவ பிரியர்களுக்காக தம் கோஸ்ட் பிரியாணி பிரதான உணவாக வழங்கப்பட்டது. அதோடு, 12 மணி நேரம் ஊற வைத்து வறுக்கப்பட்ட ஆட்டுக்கால் அதிபர் டிரம்ப்புக்காக ஸ்பெஷலாக செய்யப்பட்டிருந்தது. சைவப் பிரியர்களுக்காக மஸ்ரூம் பிரியாணி தரப்பட்டது. ஜனாதிபதி மாளிகையின் பிரதான உணவான தால் ரைசினா மற்றும் புதினா ரைத்தாவும் இடம்பெற்றது. அத்தோடு ஹேசல்நட் ஆப்பிள், வெனிலா ஐஸ்கிரீம், மால்புவா ரப்டி ஆகியவையும் விருந்தில் வழங்கப்பட்டன. என்னதான் இருந்தாலும், டிரம்ப் விரும்பி உண்ணும் மாட்டிறைச்சி மட்டும் விருந்தில் இடம் பெறவில்லை.

ஷெர்வானியில் ஜொலித்த இவாங்கா
இவாங்கா டிரம்ப் முதல் நாள் அணிந்து வந்த ஆடை பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பேபி ப்ளு நிறத்தில் பூ வேலைப்பாடுடன் கூடிய மிக அழகான உடையை அவர் அணிந்து வந்திருந்தார். இது ப்ரோவன்சா ஸ்கொலர் நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஏற்கனவே அர்ஜென்டினா பயணத்தின்போதும் இந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.1.7 லட்சமாகும். இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற இவாங்கா இந்திய ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே உருவாக்கிய ஷெர்வானியை அணிந்திருந்தார். மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் பட்டில் கைகளால் நெய்யப்பட்ட வெள்ளை நிற ஷெர்வானியை இவாங்கா அணிந்திருந்தார். இது குறித்து அனிதா டோங்ரே கூறுகையில், “இந்த மாடல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்திற்கும் இந்த மாடல் மிகவும் பொருத்தமானதாகவும், அழகானதாகவும் உள்ளது” என்றார்.

காங்கிரஸ் புறக்கணிப்பு
ஜனாதிபதி மாளிகையில் அதிபர் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சிக்கு அரசியல் தலைவர்கள் அழைக்கப்படவில்லை. அனைத்து மாநில முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரசின் சோனியா காந்தி, ராகுலுக்கு அழைப்பு இல்லை என்பதால், மன்மோகன் சிங்கும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்து பங்கேற்கவில்லை.

தாமரைக்கு மரியாதையா?
அமெரிக்க அதிபருடன் வந்துள்ள அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக அணிந்திருந்த ஆடைகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை வெகுவாக கவர்ந்தன. அதிபரின் மனைவி மெலானியா முதல் நாளன்று பிரெஞ்சு-அமெரிக்கன் ஆடை வடிவமைப்பாளர் ஹெர்வே பியர் வடிவமைத்த ஜம்சூட் எனப்படும் ஆடையை அணிந்து வந்திருந்தார். இந்திய ஜவுளிக்கு மதிப்பளிக்கும் வகையில் பச்சை பட்டு தங்க ஜரிகையால் ஆன சாஷ் எனப்படும் துணி பட்டையை இடுப்பில் அவர் அணிந்திருந்தார். இரண்டாவது நாளான நேற்று மெலானியா பருத்தி-பட்டு நூலால் உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார். அதில் பிங்க், காவி மற்றும் நீல நிறத்தில் இலைகளுடன் கூடிய பூ வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பூக்கள் தாமரை போன்றே இருந்தன. மெலானியாவின் உடையில் இருந்த பூக்கள் பார்ப்பதற்கு தாமரை போன்றே இருந்தன. இந்த உடையின் விலை ரூ.1லட்சத்து 15ஆயிரத்து 265 ஆகும்.

‘சிஏஏ பற்றி விவாதிக்கவில்லை’
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிபர் டிரம்ப் பேசுவார் என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து டிரம்ப் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது சிஏஏ விவகாரம் குறித்து ஆலோசிக்கவில்லை. ஏனெனில் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை. சிஏஏ பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் மிகப்பெரிய பிரச்னையாகவே இருந்து வருகிறது. அதை தீர்க்க இந்தியா, பாகிஸ்தானும் இணைந்து முயற்சிக்க வேண்டும். இதில் மத்தியஸ்தம் செய்ய இரு நாடுகளும் விருப்பப்பட்டால், அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதைப்பற்றிய எங்கள் கவலையை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளோம். எனவே இந்த விஷயத்தில் மகிழ்ச்சியான முடிவு ஏற்படும் என நம்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Tags : war helicopters ,US ,speech ,Modi-Trump ,Delhi , US, 21,000 crores, signing of contract, Delhi, Modi-Trump, end of speech
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...