×

சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் சிறுத்தை பதுங்கல்: கேமரா பொருத்தி வனத்துறை ஆய்வு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மேட்டூரில் இருந்து சத்தியமங்கலம் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது திலகவதி, தங்கவேல் ஆகியோரது விளைநிலங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், விவசாயிகள் தோட்டத்திற்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பூப்பறித்தல், களைவெட்டுதல் உள்ளிட்ட விவசாய பணிக்கு வந்த கூலித்தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் அறிவுரையின் பேரில், சிறுத்தை நடமாடிய பகுதியில் 4 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றபின் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சத்தியமங்கலம் நகர்ப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை நடமாடிய பகுதியில் இரவு நேரத்தில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச  செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : garden ,Sathyamangalam , Satyamangalam, Leopard, Camera, Forest Department
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...