அணைகளில் நீர்மட்டம் சரிவு கோடைக்கு முன்பே மிரட்டுகிறது குடிநீர் பஞ்சம்: வைகை, குண்டாறு வறண்டது

மதுரை: அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருவதால் வைகை, குண்டாறு வறண்டு 106 கூட்டு குடிநீர் ஆதாரங்களில் கிடைக்கும் நீர் அளவும் சரிகிறது. கோடை நெருங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு மிரட்டுகிறது. முல்லை; பெரியாறு, வைகை அணைகளில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, கோடை கால குடிநீருக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மே இறுதி வரை சமாளிக்க போதுமானதாக இல்லை. அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் பெரியாறு அணையில் 115.60 அடி, வைகையில் 49.21 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையிலிருந்து குடிநீருக்காக 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டும் அதில் ஒரு சொட்டுகூட வைகைக்கு வந்து சேரவில்லை. ஏனென்றால் வரும் வழியில் முல்லையாற்றில் முறைகேடாக 400க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாரில் 115.15 அடி, வைகையில் 47.50 அடி இருந்தது. ஆனால் தற்போது சிறிதளவு கூடுதலாக உள்ளது. கடந்த ஆண்டு கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்துவதால் வைகை அணையில் நீர் ஆவியாகும் அளவும் அதிகரிக்கிறது. எனவே இதை வைத்து பார்க்கும் போது மே இறுதி வரை சமாளிக்க முடியாத நிலையே நிலவும். ஏனென்றால் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது. மதுரை மக்கள்தொகை 20 லட்சத்தை எட்டியுள்ளது. வெளியூர்களில் இருந்து அன்றாடம் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். தினமும் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 200 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை ஆகிறது. 100 மில்லியன் பற்றாக்குறை நிலவுகிறது.

வைகை ஆற்றில் அணை முதல் ராமநாதபுரம் வரை 106 கூட்டுகுடிநீர் ஆதாரங்கள் அமைந்துள்ளன. ஆறு வறண்டுள்ளதால் இதிலுள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து கிடைக்கும் நீரின் அளவும் சரிந்து வருகிறது. குண்டாறும் வறண்டு கிடக்கிறது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மே மாதம் மதுரை சித்திரை திருவிழாவுக்காகவும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்ப முடியும் என்ற நிலை நிலவுகிறது.

Related Stories: