×

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு: 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு...கடும் நெருக்கடியில் மத்திய அரசு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஷாஹீன் பாக் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று வடகிழக்கு  டெல்லி பகுதிகளான ஜாபராபாத் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. அதேநேரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணி, போராட்டக்காரர்கள் குழுவுடன் எதிர்பட்ட  போது, கோகுல்புரி பகுதியில் திடீரென வன்முறை வெடித்தது. ஆனாலும் நேரம் போகப்போக நிலைமை மிகவும் மோசமானது.

 கைகலப்பு, கல்வீச்சு எனப் பெரிதாகிய இந்தப் போராட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் போராட்டக்காரர்  ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வன்முறையால் ஒரு பெட்ரோல் பங்க், வாகனங்கள், 10 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் எரித்து கொளுத்தப்பட்டன.  வன்முறையில் டெல்லி போலீஸ் ஏட்டு ரத்தன் லால் கொல்லப்பட்டார். வன்முறை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில், தற்போதைய தகவலின்படி ஏட்டு உட்பட 10 பேர் பலியானதாகவும், 105க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஆனால், டெல்லி வடகிழக்கு பகுதியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு  இடையே மீண்டும் வன்முறை இன்று காலை  ஆரம்பித்தது. மேலும், வன்முறையால் வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை இன்று மூட டெல்லி அரசு உத்தரவிட்டது. வடகிழக்கு டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதி எம்எல்ஏக்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, தொடர் வன்முறை காரணமாக டெல்லியில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜாபராபாத், மாஜிப்பூர், சாந்த்பக்  மற்றும் காரவல் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தொடர் வன்முறையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.


Tags : places ,Delhi , Delhi violence toll rises to 10: curfew issued in 4 places
× RELATED இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு...