குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவில்லை..ஆனால் மதசுதந்திரத்தை நிலைநாட்டுவதில் பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார் : அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

டெல்லி : எரிசக்தி துறையில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்கு எரிவாயு, எண்ணெய் விற்பனை தொடர்பாக அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது என்பதையும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் ஏராளமான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க உள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இந்தியா மிக பிரமாண்ட சந்தையை கொண்டுள்ள நாடு என்றும் அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர்கள் பெருமளவில் முதலீடு செய்வார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்தும் தலிபான்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்வது குறித்தும் பிரதமர் மோடியுடன் தாம் விவாதித்ததாக தெரிவித்த டிரம்ப், தலிபான் அமைப்பின் சமாதான உடன்பாடு செய்வது பலன் அளிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார். மேலும் மத சுதந்திரம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும் மத சுதந்திரத்தில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என்பதையும் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மோடியுடன் தாம் விவாதிக்கவில்லை என்பதையும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

தொடர்ந்து ட்ரம்ப் பேசுகையில், பிரதமர் மோடிக்கும் தமக்கும் இடையே சிறப்பான உறவு உள்ளது. நரேந்திர மோடி மிக உறுதியான தலைவர். பிரதமர் நரேந்திர மோடி அற்புதமான தலைவர். பிரதமர் மோடியுடனான சந்திப்புகள் மனநிறைவை தருகின்றன. எனது வருகை, அனைத்து இந்தியர்களும் விரும்பும் வகையில் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமாகவே முன்னெடுக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்து, அமைதியை நிரந்தரப்படுத்துவதே இலக்கு.

தாலீபான்களுடனான அமெரிக்க அமைதி ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடியுடன் பேசினேன்.பாக். மட்டுமின்றி, அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்.தீவிரவாதத்தை எந்தவொரு நாடும், எந்த வடிவிலும் ஒருபோதும் ஊக்குவிக்க கூடாது.ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. மக்கள் மதசுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார்.சில தாக்குதல் குறித்து நான் கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள்விவகாரம். இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது என்பதில் உறுதி.மதசுதந்திரத்தை நிலைநாட்டுவதில் பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார், எனத் தெரிவித்தார்.

Related Stories: