×

கொரோனா வைரஸ் எதிரொலி : அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் பெருமளவிலான மக்கள் பாதிப்புக்குள்ளாகின. கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவின் பொருளாதாரத்தை முடக்கி போட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் கடந்த 2 வாரங்களில் சீனாவுக்கு சென்று வந்த பிறநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்தது. அதோடு, சீனாவில் இருக்கும் 21 வயதுக்கு உட்பட்ட அனைத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவை சந்தித்துள்ளது. ஈரான், இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த அச்சம் பங்குசந்தைகளில் எதிரொலித்ததன் காரணமாக, சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் Dow jones மற்றும் S&P 500 பங்குசந்தை குறியீட்டு எண்கள், இரண்டு ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவை சந்தித்துள்ளன.  S&P 500 சந்தை மூலதன மதிப்பில் ஒரே நாளில், 927 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமைக்கு பிறகு 1.33 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு சந்தை மூலதன மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிட்டு, தங்கம், கருவூல பத்திரங்களை நோக்கி முதலீடுகளை கொண்டு சென்றதே இந்த சரிவுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Corona ,US , Corona, echo, US stock market, decline
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...