வேதாரண்யம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்: ஆள்பற்றாக்குறையால் கொள்முதல் செய்யவில்லை என குற்றச்சாட்டு!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆள்பற்றாக்குறையால் ஆயிரக்கணக்காக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பதற்கு குறைந்தது ஒருவார காலம் காத்திருக்க வேண்டியதாக வேதாரண்யம் வட்டார விவசாயிகள் கூறுகின்றனர். நேரடி கொள்முத நிலையங்களில் விற்பனை செய்ய முடியாததால் குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள விவசாயி தெரிவித்ததாவது, 15 நாட்களாக நெல் மூட்டைகள் வேதாரண்யம் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனை செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது ஆள்பற்றாக்குறை என கூறுகின்றனர். மேலும் இணையதள சேவை சரிவர செயல்படாத காரணத்தினால் பணம் கிடைப்பதிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவடை செய்த நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்கு சரியான இடவசதி இல்லை.

இதனால் விவசாயிகள் பெரிதும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். இதையடுத்து மிகவும் கடினப்பட்டு வேளாண்மை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பயிர்களை சாகுபடி செய்திருப்பதாகவும், ஆள்பற்றாக்குறையால் கொள்முதல் செய்ய முடியவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார். நெல்கள் கொள்முதல் செய்யாமல் நீண்ட காலம் கிடப்பில் இருப்பதால் அவற்றினை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேதாரண்யத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களிலும் இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: