திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனத்துக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை, வேலூர் மற்றும் ஆரணியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் திடீரென ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையானது 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனம், உரிமையாளரின் வீடு, அந்நிறுவனத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரியவந்துள்ளது. முழுமையான சோதனைக்கு  பின்னரே இத்தகைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றி தெரியவரும். இந்த சோதனையானது பட்டுசேலை நிறுவன உரிமையாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டை அடுத்து இந்தச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: