திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போடுபவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறதா சந்தனம்?... உறுதிப்படுத்தக் கோரி வழக்கு

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போடுபவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சந்தனம் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த கோரிய வழக்கில், அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த நாகமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேர்த்திக்கடனாக மொட்டை போடும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சந்தனம் விற்பனை செய்யவேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் சந்தனம் விற்பனைக்கான ஏலம் எடுத்தவர், சாதாரண நாட்களில் ரூ.10க்கும், விழா நாட்களில் ரூ.20க்கும் விற்பனை செய்கிறார்.

சந்தன பவுடர் விற்பனை விலை குறிப்பிட்டிருக்கும் விலைப்பட்டியல் பலகையை சேதப்படுத்தியும் உள்ளார். விலைப்பலகையை சரி செய்து புதிய விலைப்பலகை அமைக்க ரூ.3,000ஐ, கோயிலுக்கு நன்கொடையாக ஆகஸ்ட் மாதத்தில் செலுத்தியும், நிர்வாகம் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குத்தகைதாரர் தொடர்ந்து பக்தர்களிடம் அதிக விலைக்கு சந்தனத்தை கோயில் தேவஸ்தான பிரசாதம் என்ற பெயரில்  விற்பனை செய்து வருகிறார். ஏல விதிமுறைகளை மீறிய குத்தகைதாரர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விற்பனை கவுன்ட்டரை அகற்ற வேண்டும், சந்தன விற்பனை விலை குறித்த பலகை பக்தர்கள் பார்வையில் படும்படி அமைத்து, பக்தர்களுக்கு சந்தனம் ரூ.1க்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்தரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மனுவுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, மனுவின் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: