தரங்கம்பாடி அருகே நல்லாடை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் புகார்மனு கொடுத்ததால் பரபரப்பு

நாகை: தரங்கம்பாடி அருகே நல்லாடை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது குழந்தைகள் நல அலுவலரை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷங்கமித்திரன். இவர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். இதில் தெரிவித்திருப்பதாவது: எனது மனைவி நல்லாடையில் உள்ள பள்ளியில் ஆசியையாக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனை எனது மனைவியிடம் மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து எனது மனைவி தலைமை ஆசிரியரை கண்டித்தார். மேலும் எனது மனைவி என்னிடம் இது குறித்து கூறினார்.

நான் உடனே தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்டேன். இதில் கோபமடைந்த தலைமை ஆசிரியர் எனது மனைவி பணியில் இருக்கும் போது அலுவலக ரீதியாக தொல்லை கொடுப்பதும், ஆபாசவார்த்தைகளால் பேசுவதுமாக இருந்தார். இது குறித்து சீர்காழி தனி தாசில்தாரிடம் புகார் செய்தேன். அதன்பேரில் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் தலைமை ஆசிரியரை ஒரு மாதம் மட்டும் மருத்துவ விடுப்பில் அனுப்பி விட்டு இந்த பிரச்னை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களிடம் தலைமை ஆசிரியரை நிரந்தரமாக வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து விட்டதாக கூறினர். இந்நிலையில் எனது மனைவி மீது நடவடிக்கை எடுத்து பெருமூலை என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்துள்ளனர்.

ஆனால் தலைமை ஆசிரியர் அதே பள்ளியில் பணியில் சேர்த்துள்ளார். எனவே மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை கொண்டு விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: