குஜிலியம்பாறையில் சிட்டுக்குருவி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மாணவி: விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் அழிந்து வரும் சிட்டுக்குருவி வளர்ப்பில் மாணவி ஆர்வம் காட்டி வருவது வரவேற்பை பெற்றுள்ளது. காகத்திற்கு அடுத்து, மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. ஆனால் வளர்ச்சி என்ற பெயரினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு, வயல்வெளிகள் அழிப்பு, மொபைல் போன் டவர் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகளை தற்போது வெளியில் கூட காண முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதனால் தான் என்னவோ இன்றைய இளைய தலைமுறைக்கு சிட்டுக்குருவி பற்றி தெரியவில்லை. உலகளவில் தற்போது அழிந்து வரும் பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் ஒன்றாக உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் குஜிலியம்பாறையை சேர்ந்த ஒரு சிறுமி சிட்டுக்குருவி வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துவது அனைவரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

குஜிலியம்பாறையை சேர்ந்தவர் நந்தா (11). இவர் கரூர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் முன்புறமாக 2 சிட்டுக்குருவிகள் கூடு கட்டியுள்ளது. இதை பார்த்து ஆர்வமடைந்த மாணவி, சிட்டுக்குருவி வளர்க்க ஆர்வம் காட்டியுள்ளார். தொடர்ந்து தனது ஆசை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இவரது பெற்றோர் மண்பானைகள் தயார் செய்யும் இடத்திற்கு சென்று, இதற்கென பிரத்யேகமாக 7 மண்குடுவைகள் தயார் செய்ய சொல்லி, வாங்கி வந்து குடுவைகள் அனைத்தையும் வீட்டின் பக்கவாட்டு சுவரில் தொங்க விட்டனர். நாளடைவில் சிட்டுக்குருவிகள் பானையில் கூடுகட்டி, முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறிக்க தொடங்கியது. தற்போது வரை 60க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இங்கு வசித்து வருகிறது.

இதுகுறித்து மாணவி நந்தா கூறுகையில், வீட்டு வாசலில் சுற்றி திரிந்த சிட்டுக்குருவியை பார்த்த போது, அதனை வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆசையை பெற்றோரிடம் கூறியதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். காலை 7 மணிக்கு பள்ளி பேருந்தில் நான் செல்ல வேண்டும். அதனால் பள்ளி செல்வதற்கு முன்பாகவே சிட்டுக்குருவிகளுக்கு இரையையும், தண்ணீரையும் வைப்பதற்கு தவறமாட்டேன். 200க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளை வளர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு குருவி இனங்களை கூண்டிற்குள் அடைத்து வைத்து வளர்ப்பதில் தமக்கு துளி அளவும் விருப்பம் இல்லை. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிட்டுக்குருவிகளை வளர்க்கும் பழக்கத்தை பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: