வத்திராயிருப்பு அருகே கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையால் மக்கள் அவதி

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டி தெற்குப் பகுதியில் மேற்கு தொடா்ச்சி மலை உள்ளது. மழை பெய்யும் காலங்களில் இங்கிருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீர் புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டைக்கு இடையில் சாமியார் ஓடை வழியாக அனுப்பங்குளத்திற்கு செல்கிறது. சாமியார் ஓடையில் உள்ள  தரைப்பாலம் சேதமடைந்ததால் புதுப்பட்டி செக்கடி பஜாரில் இருந்து கிறிஸ்டியான் பேட்டை, அணைக்கரைப்பட்டி, அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த ஓடைபாலம் வழியாக மக்கள் சென்று வருகின்றனர். இந்த தரைப்பாலத்தை உயர்த்தி பெரிய பாலமாக கட்டப்பட்டால் மழை பெய்யும் காலங்களில் புதுப்பட்டியில் இருந்து கிறிஸ்டியான் பேட்டை மற்றும் ஊர்களுக்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் செக்கடி பஜாரில் இருந்து கிறிஸ்டியான் பேட்டை வரை உள்ள சாலை பெயர்ந்து கற்களாக காட்சியளிக்கிறது. இதனால் டூவீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் டயர் பஞ்சராகி பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த ஏசுதாஸ் கூறுகையில், கிறிஸ்டியான்பேட்டையில் 2000 பேர் வரை வசிக்கின்றனர். இங்குள்ள புதுப்பட்டி செக்கடியிலிருந்து கிறிஸ்டியான்பேட்டை வரை உள்ள சாலை ஒன்றரை கிலோ மீட்ர் தூரத்திற்கு கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அத்துடன் கிறிஸ்டியான்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள சாமியார் ஓடை தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது. மழைக்காலத்தில் இப்பாலத்தின் வழியே மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த தரைப்பாலத்தை உயர்த்தி பெரிய பாலமாக கட்ட வேண்டும் என்றார்.

Related Stories: