×

திருப்பதியில் அறங்காவலர் குழு உறுப்பினரின் சிபாரிசு கடிதம் மூலம் வாங்கிய தரிசன டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை: 5 இடைத்தர்கள் கைது

திருப்பதி: திருமலை திருப்பதியில் அறங்காவலர் குழு உறுப்பினரின் சிபாரிசு கடிதம் மூலம் வாங்கிய தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்த 5 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதியில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை முறைகேடாக பயன்படுத்தி பலர் ஆர்ஜித சேவா, வி.ஐ.பி. பிரேக் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். தங்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதில் 10 இடைத்தரகர்கள் உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களை முறைகேடாக பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த டிக்கெட் பெற்ற பக்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 5 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய இதுகுறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகன்மோகன் ரெட்டி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரிடம், தங்களின் உறவினர்கள் வருவதாக கூறி சிபாரிசு கடிதம் பெற்று வாங்கிய விஐபி தரிசன டிக்கெட்டுகளை தலா 3,500 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து அறங்காவலர் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி கிஷோர் ரெட்டி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரின் பின்னணியில் ஜனர்தனன், ஜெகதீஸ்வர ரெட்டி, தாமோதரன் உள்ளிட்ட மேலும் 4 பேர் இருப்பது தெரிய வந்தது.

மேலும் இவர்களுடன் திருப்பதியை சேர்ந்த நாகராஜ், புருஷோத்தம் ரெட்டி, திருப்பதி ரெட்டி, நாகார்ஜுன ரெட்டி, உதய பாஸ்கர், தியாகராஜன், பாஸ்கர் ரெட்டி , யோகநாத் ஆகியோர்களும் இதேபோன்று இடைத்தரகர்களாக இருந்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. நாகராஜ் தலைமையில் இந்த கும்பல் செயல்பட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களை வழங்கும போது யாருக்கு வழங்குகிறீர்கள், அதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒருமுறைக்கு பலமுறை விசாரித்து பின்னர் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : trustee member ,Tirupathi ,Tirumala , Tirupati, Board of Trustees, VIP Darshan Tickets, Abuse, Intermediaries, Arrests
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்...