×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை: ஆஜராக விலக்கு கேட்ட ரஜினி கோரிக்கை ஏற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-5-2018 அன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவருக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் 19-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை ஆணையர் அருணாஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இன்று ரஜினிகாந்த் உள்ளிட்ட 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ரஜினிகாந்தின் வக்கீல் ஆஜராகி அபிடவிட் தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. இந்த விசாரணை வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை ஆணையத்தில் ரஜினி வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். தனிநபர் விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என ரஜினி பேசியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணைக்கு ஆஜராக விலக்கு கேட்ட ரஜினி கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராவதில் விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கையை அருணாஜெகதீசன் ஆணையம் ஏற்றது. ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகளை சிலிட்ட கவரில் ஆணையம் வழங்கியுள்ளது என்று ரஜினி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Tags : Rajni ,Tuticorin , Tuticorin, Trial, Trial, Investigation, Appeal, Rajni Request, Acceptance
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...