தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு : மார்ச் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

டெல்லி : தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட 17 மாநிலங்களை சேர்ந்த 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

பதவிக்காலம் முடிவடையும் உறுப்பினர்கள்

ராஜ்ய சபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம், மகாராஷ்திரா,ஒடிசா,ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட  17 மாநிலங்களில் 55 உறுப்பினர்கள் பதவிக் காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இவர்களில் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, நெல்லையை சேர்ந்த அதிமுக மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் முத்துக்கருப்பன், அதிமுகவை சேர்ந்த மேட்டுப்பாளையம் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரங்கராஜன், அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டு தற்போது பாஜவில் சேர்ந்துள்ள சசிகலா புஷ்பா  ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவு பெறுகிறது.

வெற்றி வாய்ப்பு : திமுக 3, அதிமுக 3

சட்டமன்ற எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர். இதற்கு போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். அவ்வாறு நடக்கும் தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பர். போட்டியில்லாத பட்சத்தில் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர்.அதன்படி தமிழகத்தில் சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலங்களின் அடிப்படையில் அதிமுக,திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

தேர்தல் குறித்த முக்கிய தேதிகள்

இந்நிலையில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் : மார்ச் 6ம் தேதி

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் : மார்ச் 13ம் தேதி

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை : மார்ச் 16ம் தேதி

வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 18ம் தேதி  

Related Stories: