×

ஆந்திராவில் இருவேறு இடங்களில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 27 தமிழர்கள் உட்பட 29 பேர் கைது : ரூ.2 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் 7 வாகனங்களுடன் பறிமுதல்

திருமலை: ஆந்திராவில் இரு வேறு இடங்களில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 27 பேர் உள்பட 29 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 7 வாகனங்களையும் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காஜிபேட்டையில் 47 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 4 கார்கள், ஒரு லாரி பறிமுதல்

ஆந்திர மாநிலம் கடப்பா  மாவட்ட வன அலுவலர் குரு பிரபாகர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,காஜிபேட்டை மண்டலம் நாகசாமி பள்ளியில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டு ஒரு கும்பல் வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது செம்மரம் வெட்டிக் கொண்டு ஒரு கும்பல் லாரியில் ஏற்றிக் கொண்டு இருப்பதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றனர்.

இதில் கள்ளக்குறிச்சி , விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் மற்றும் பொதட்டூர் ஒய்.எம்.ஆர். காலனியை சேர்ந்த மல்லேஷ், மைதுக்கூரை  சேர்ந்த சுப்பாராயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டு 4 கார்கள், ஒரு லாரி மற்றும் 47 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தலில்  சர்வதேச கடத்தல்காரன் அப்பாஷ், பொதட்டூரை  சேர்ந்த மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது .அவர்களையும் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 18 இளைஞர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை இழக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது போன்ற இளைஞர்களுக்கு கலந்தாய்வு செய்து அவர்களை கடத்தலுக்கு வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் கடத்தல்காரர்கள் போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக லாரியில் தனி அறையை ஏற்பாடு செய்து அதில் செம்மரங்களை பதுக்கி வைத்து மேல் பகுதியில் காய்கறி கூடைகளை  அடுக்கி வைத்து கடத்தலுக்கு முற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

பீமவரம் வனப்பகுதியில் இரண்டு கார்கள் மற்றும் 25 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

இதேபோன்று திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய எஸ்.பி. ரவி சங்கருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆர்.எஸ்.ஐ. வாசு தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பீமவரம் அருகே வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கொண்டு ஒரு கும்பல் வருவதை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதை அடுத்து கடத்தல்காரர்கள் செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் சேலத்தை சேர்ந்த சி சேட்டு (25) என்பவரையும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஏ. ஜெயக்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் இருந்த இரண்டு கார்கள் மற்றும் 25 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி வெங்கடய்யா, ஆர்.ஐ. சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தப்பியோடியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருவேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் தமிழகத்தை சேர்ந்த 27 பேர் உள்பட 29 பேரை கைது செய்து ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 72 செம்மரங்கள் பறிமுதல் செய்தனர்.

Tags : places ,Andhra Pradesh ,Tamils , Sheep bundles, confiscation, Bhimavaram, woodland, ghazipet, Andhra Pradesh
× RELATED சந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை...