குறைந்த விலையில் விற்பனை மதுரை சிறை கைதிகள் நடத்தும் ‘மட்டன் ஸ்டால்’: மக்களிடம் பெருகும் வரவேற்பு

மதுரை: மதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் நடத்தப்படும் மட்டன் ஸ்டாலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மதுரை மத்திய சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளுக்கு என சொந்தமாக தொழில் துவக்குவதற்கு பல்வேறு பயிற்சிகள் சிறைக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறை நுழைவுப்பகுதியை ஒட்டிய இடத்தில் ‘ஜெயில் பஜார்’ என்ற பெயரில் கடை திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குறைந்த விலை காரணமாக கடைக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிறை வளாக ஞானஒளிவுபுரம் ரோட்டில் துணி அயர்ன் செய்து தரும் கடை கைதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, தற்போது புதிய ‘மட்டன் ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. மதுரை நகருக்குள் கிலோ ₹800 வரை வெள்ளாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கைதிகளே வளர்த்து வரும் வெள்ளாடு கொண்டு வரப்பட்டு, கிலோ 700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இறைச்சி விற்பனை கடை 15 கைதிகள் பொறுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆட்டிறைச்சி கிலோ ₹700க்கும், 4 கால்கள் மொத்தமாக 200க்கும், தலை 200க்கும் விற்கப்படுகிறது. வாரத்தில் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டும் முதல்கட்டமாக விற்பனை நடக்கிறது. வரும் நாட்களில் வாரம் முழுவதும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும். சிவகங்கையில் உள்ள திறந்தவெளி சிறையில் வெள்ளாடுகள் வளர்ப்பில் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். லாரிகள் மூலம் அங்கிருந்து ஆடுகள் மதுரை கொண்டு வரப்பட்டு, சிறை வளாகத்திலேயே கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்குப் பிறகு, மாநகராட்சி அதிகாரி கண்காணிப்பில் வெட்டி விற்பனை நடக்கிறது. வாரத்தின் இரு நாட்களும் குறைந்தது 100 கிலோவிற்கு மேல் விற்பனையாகிறது’’ என்றார்.

Related Stories: