எஸ்எஸ்ஐ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சென்னை உட்பட 6 ஊர்களில் திடீர் ரெய்டு: என்ஐஏ அதிகாரிகள் அதிரடி: செல்போன், சிம்கார்டு கவர்கள், வங்கி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், கடந்த மாதம் 8ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்  அப்துல்சமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு 10 நாட்களுக்கு முன்பு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் எஸ்ஐ சிவகுமார் தலைமையில் 3 என்ஐஏ அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சீதக்காதி தெருவில் உள்ள மைதீன் பாத்திமா என்பவரது வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு வந்தனர். அங்கு 9.45 மணி வரை சோதனை நடத்தினர். மைதீன் பாத்திமா, திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செய்யது அலி நவாசின், 2வது மனைவி ஆவார். இந்தச் சோதனையின் போது கடந்த 8 ஆண்டுகளில் மைதீன் பாத்திமா பயன்படுத்திய செல்போன்கள், சிம் கார்டு கவர்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பியது தொடர்பான பரிவர்த்தனை ரசீதுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட தவுபிக் மற்றும் 6 பேர் கடந்த ஆண்டு டிச.11ம் தேதி காயல்பட்டினத்தில் உள்ள மைதீன் பாத்திமா வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சேலம் சென்றுள்ளனர். இதுதொடர்பாக குமரி போலீசார் கடந்த ஜன.26ம் தேதி தவுபிக்கை மைதீன் பாத்திமா வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டதால் அவர்கள் மீண்டும் சோதனை நடத்தினர்.

சென்னையில்: சென்னை நெற்குன்றத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர், களியக்காவிளை எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு போலி முகவரி மூலம் சிம்கார்டுகள் வாங்கிக் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் ராஜேஷ் வீட்டிற்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 4 பேர், சுமார் 4 மணி நேரம் சோதனை செய்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது.  கடலூரில் 3 இடங்களில் சோதனை: எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான காஜாமொய்தீன், அவரது டிரைவர் ஜாபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஜாபர் அலி வீட்டிற்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் என்ஐஏ இன்ஸ்பெக்டர் (கொச்சின்) பீட்டர் பிரான்கோ தலைமையில் போலீசார் வந்தனர். அங்கு ஜாபர் அலியின் தாய், தங்கை, தம்பி ஆகியோர் இருந்தனர். அவரிகளிடம் விசாரணை நடத்தியதுடன், வீட்டில் காலை 9.20 மணி வரை சோதனை நடத்தி, லேப்டாப், செல்போன் மற்றும் சில ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 7 டைப் 1 குடியிருப்பில் காஜாமொய்தீன் மனைவி இந்திராகாந்தி வசித்து வருகிறார். என்எல்சி பொது மருத்துவமனையில் நர்ஸ் உதவியாளராக உள்ள இவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு என்ஐஏ டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில், போலீசார் வந்து 6 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதேபோல காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளுமேட்டில் உள்ள ஹாஜாமொய்தீன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. அவரது மற்றொரு மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரி டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் அதிகாலை 4 மணி முதல் பகல் 11 மணி வரை 7 மணிநேரம் விசாரணை மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து செல்போன், சிம்கார்டுகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில்: தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி தந்ததாக, சேலம் முகமது புறாவைச் சேர்ந்த அப்துல் ரகுமானை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க கேரளாவில் இருந்து 3 என்ஐஏ குழுவினர் நேற்று முன்தினம் சேலம் வந்தனர். இதில், 2 குழுவினர் மாநகர பகுதிகளிலும், ஒரு குழுவினர் புறநகரான தீவிட்டிப்பட்டியிலும் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. இதனிடையே, மாநகரில் உள்ள ஒரு குழுவைச் சேர்ந்த 3 என்ஐஏ அதிகாரிகள்,  அப்துல்ரகுமான் வீட்டிலும், மற்றொரு குழுவினர் அம்மாப்பேட்டை பகுதியிலும் சோதனை நடத்தினர். இதில், அப்துல் ரகுமான் அறையில் வைக்கப்பட்டிருந்த டைரி, புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கியது உறுதியானது

சேலத்தில் அப்துல் ரகுமானின் செல்போன் கடையிலும், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, போலி முகவரி மூலமும், ஆவணங்கள் இன்றியும் 10 சிம்கார்டுகளை தீவிரவாதிகளுக்கு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் பல இடங்களில் நடந்த பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிராக அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: