மன்னருக்கு இரவு 1 மணிக்கு கடிதம் அனுப்பினார்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா: மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமா?

கோலாலம்பூர்: இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மலேசியப் பிரதமராக கடந்த 1981ம் ஆண்டில் இருந்து பதவியில் இருந்த மகாதீர்  முகமது (94), 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர்,  2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நம்பிக்கை ஒப்பந்தம்  என்ற பெயரில் அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சியுடன் கூட்டணி  அமைத்து மீண்டும் பிரதமரானார். அப்போது, நவம்பருக்கு பின்னர் அன்வருக்கு  பிரதமர் பதவியைவிட்டு கொடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், மலேசியப் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட மகாதீர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை அவரது பெர்சாது கட்சியின் தலைமை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணிக்கு மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தான், மகாதீரின் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அன்வர் கூட்டணியில் இருந்து அக்கட்சியின் 11 எம்பி.க்கள் பதவி விலகியதாகவும் தெரிவித்தது. இது, எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் பதவிக்கு வருவதை தடுக்கவும், புதிய கூட்டணியை அமைப்பதற்குமான மகாதீரின் முயற்சியாக கருதப்படுகிறது. கடந்த வார இறுதியில் கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அவர் மீண்டும், வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, தனக்கு ஆதரவளிக்க அதிகளவு எம்பி.க்கள் தயாராக இருப்பதாகவும், அதனால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படியும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மன்னருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்பி.க்களின் ஆதரவு இல்லை என்று ஆளும் கூட்டணி அரசு கூறி வருகிறது. இதனால், மலேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாதீர், இந்தியாவின் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: