×

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக சுகாதார அமைப்பின் குழு சீன மருத்துவமனைகளில் பார்வை: சிகிச்சைகள் குறித்து ஆய்வு

பீஜிங்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளை உலக சுகாதார அமைப்பு குழுவினர் நேற்று பார்வையிட்டனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தீவிரமடைந்தது. இது பல்வேறு மாகாணங்களிலும் பரவியது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 31 மாகாணங்களிலும் சேர்த்து நேற்று முன்தினம் வரை 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 1,846 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் புதிதாக 409 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 31 மாகாணங்களிலும் கொரோனாவிற்கு 150 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவில் கொரோனா வைரஸ் சிகிச்சை அளித்து வரும் பல்வேறு மருத்துவமனைகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்கள். டோங்க்ஜி மருத்துவமனை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள வுகான் விளையாட்டு மையம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சிகிச்சை முறை, நோயை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேசிய சுகாதார அமைப்பின் இயக்குனர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து அவர்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர். இதனிடையே, தென்கொரியாவில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. நேற்று பிற்பகல் வரை புதிதாக 70 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானிலும் பரவி வரும் கொரோனாவிற்கு நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 47 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதேபோல் இத்தாலியிலும் வைரஸ் பாதித்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.  லொம்பார்டியை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து கொரோனா பலி 4 ஆக அதிகரித்தது. பாக். விமானங்கள் மீண்டும் ரத்து : சீனாவில் இருந்து தனது நாட்டுக்கு வரும் விமானங்களுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை பாகிஸ்தான் தடை விதித்திருந்தது. 3ம் தேதி விமான சேவை தொடங்கியவுடன் வாரத்திற்கு 2 விமானங்களை மட்டும் பாகிஸ்தான் இயக்கி வந்தது. இந்நிலையில் வருகிற மார்ச் 15ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான பிரிவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானுடனான தனது எல்லையையும் பாகிஸ்தான் நேற்று மூடியது.

வெளியே வந்த தனியொருவர்
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய வுகான் நகரில் 1.1 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நோய் பாதிப்பு இல்லை என்றும் நோய் தொற்று உள்ளவர்களிடம் எந்த தொடர்பும் இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் நகரைவிட்டு வெளியே  செல்ல நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.

Tags : World Health Organization ,panel ,hospitals ,Chinese ,World Health Organization Committee ,Chinese Hospital , Coronavirus, World Health Organization Committee, Chinese Hospital, Vision
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...