சார்பதிவாளர் அலுவலகங்களில் நெட்வொர்க் பிரச்னையால் பத்திரப்பதிவு நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

சென்னை: நெட்வொர்க் பிரச்னையால் சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். சென்னை மண்டலத்தில் 150 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் தினமும் 25 முதல் 100 பத்திரங்கள் வரை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று செங்குன்றம், படப்பை, திருக்கழுக்குன்றம், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்ைட, திருவாலங்காடு, வேளச்சேரி, செங்கல்பட்டு, குன்றத்தூர், மாதவரம், திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் நெட்வொர்க் பிரச்னையால் காலை முதல் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, படப்பை, செங்குன்றம் அலுவலகங்களில் 2 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திரம் கூட பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சார்பதிவாளர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது.

இதனால், காலை முதல் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் பதிவு செய்ய முடியவில்லை. பல இடங்களில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்களை நாளை (இன்று) வரும்படி சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். நேற்று மாலை 4 மணி வரை இந்த பிரச்னை சரி செய்யப்படாததால் பெரும்பாலான அலுவலகங்களில் ஒரு சில பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.நெட்வொர்க் பிரச்னை தொடரும் பட்சத்தில் பத்திரப்பதிவு குறைந்து வருவாய் குறையும் நிலை உள்ளதால், இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: