×

தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு மாணவன் உள்பட 4 பேர் கைது: 3 பைக், 6 செல்போன்கள் பறிமுதல்

வேளச்சேரி: நன்மங்கலம் ராணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் நேற்று முன்தினம் பெல்நகர் ஆஞ்சநேயர் கோயில் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.  பள்ளிக்கரணை போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவான கொள்ளையர்களின் இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, செம்மஞ்சேரி 64வது தெருவை சேர்ந்த ஜெய்சன் (20) என்பவருடைய வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து ஜெய்சனை பிடித்து விசாரித்தபோது, தனது நண்பர்களான செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த மகேஷ் (20), ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் நரேஷ்குமார் (19) ஆகியோருடன் இணைந்து பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வீடுகளில் உள்ள அலுமினிய குழாய்களை திருடி வந்தத ஒப்புக்கொண்டார்.  மேலும், திருடிய செல்போன்களை செல்போன் கடை நடத்தும் சரவணன் என்பவரிடம் விற்று பணம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, ஜாய்சன், கல்லூரி மாணவன் நரேஷ்குமார், மகேஷ் மற்றும் செல்போன் வியாபாரி சரவணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கைதான ஜாய்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் குறுக்கு வழியில் பணம் பணம் சம்பாதித்து, சொகுசு வாழ்க்கை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, புறநகர் பகுதிகளில் செல்போனில் பேசியபடி தனியாக நடந்து செல்பவர்களை நோட்டமிட்டு, கைவரிசை காட்டி வந்துள்ளனர். இந்த செல்போன்களை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் ஜெய்சன் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும், கல்லூரி மாணவன் நரேஷ்குமார் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் வாங்கியுள்ளனர். மேலும், திருட்டு பணத்தில் மது, கஞ்சா அடித்து உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையானதால் அதற்கு செலவு செய்வதற்காக தினந்தோறும் ஏதாவது ஒரு திருட்டில் ஈடுபட்டு அதனை விற்று பணம் பெற்று வந்துள்ளனர். நரேஷ்குமார் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறான்.     ஜெய்சன் மீது பெரும்பாக்கத்தில் பிரதீப் என்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 பைக் மற்றும் 6 செல்போன்கள் மற்றும் அலுமினிய குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : student , Cell phone , Four arrested,, 6 cell phones ,seized
× RELATED களக்காடு அருகே ஊருக்குள் உலாவும்...