மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் குப்பை மேடாக மாறிய சாலை: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பூர்: சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபடும் பலர், தங்களது கட்டிட இடிபாடுகளை முறையாக வெளியேற்றாமல், சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்வது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு சாலையோரங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றுவதில்லை. இதனுடன் குப்பை கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், 69வது வார்டுக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையிலும் ஆங்காங்கே கட்டிட இடிபாடுகள், குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், பாதை குறுகி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பிருந்தா திரையரங்கத்தில் இருந்து மூலகடைக்கு  செல்லும் வழியில் இடதுபுறம் கட்டிட கழிவுகளும்,  மரக்கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இதன் அருகிலேயே குப்பை கொட்டப்படுவதால், குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. ஆனால், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இதை அகற்றுவதில்லை. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால், கட்டிட இடிபாடுகளை அகற்ற எங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிடவில்லை, என தெரிவித்துள்ளனர். குப்பையை கூட அகற்ற முடியாதா? என பொதுமக்கள் கேட்டபோது, கட்டிட இடிபாடுகளில் நுழைந்து குப்பையை அகற்ற முடியாது, என தெரிவித்துள்ளனர். இங்குள்ள மண் குவியல் சாலை வரை பரவி காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலையோரம் உள்ள கட்டிட கழிவுகள் மற்றும் குப்பையை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு சாலையில் கட்டிட இடிபாடுகள் மற்றும் குப்பையை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: