மகளிர் உலக கோப்பை டி20 இந்திய அணிக்கு 2வது வெற்றி: ஷபாலி, பூனம் அசத்தல்

பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில், 18 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிகபட்சமாக 39 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஜெமிமா ரோட்ரிகியூஸ் 34 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தீப்தி 11, ரிச்சா 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.வேதா கிருஷ்ணமூர்த்தி 20 ரன் (11 பந்து, 4 பவுண்டரி), ஷிகா பாண்டே 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் சல்மா, பன்னா கோஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

பூனம் யாதவ், ஷிகா பாண்டே இருவரும் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் மட்டுமே எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நிகர் சுல்தானா 35, முர்ஷிதா கதுன் 30 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ் 4 ஓவரில் 18 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி தலா 2, ராஜேஸ்வரி 1 விக்கெட் வீழ்த்தினர்.ஷபாலி வர்மா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Related Stories: