×

வெலிங்டனில் தரமான சிறப்பான சம்பவம் நம்பர் 1 இந்திய அணியை ‘வச்சு செஞ்ச’ நியூசிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது

வெலிங்டன்: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது.பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. சவுத்தீ மற்றும் அறிமுக வேகம் ஜேமிசனின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா, முதல் இன்னிங்சில் 165 ரன்னுக்கு சுருண்டது. ரகானே 46, அகர்வால் 34, ஷமி 21, பன்ட் 19, பிரித்வி 16 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ, ஜேமிசன் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, முதல் இன்னிங்சில் 348 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன், டெய்லர், ஜேமிசன் தலா 44 ரன், கிராண்ட்ஹோம் 43, போல்ட் 38 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 5, அஷ்வின் 3, பூம்ரா, ஷமி தலா 1 விக்கெட் எடுத்தனர்.இதைத் தொடர்ந்து, 183 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்திருந்தது. பொறுப்புடன் விளையாடிய அகர்வால் 58 ரன் எடுத்தார். பிரித்வி 14, புஜாரா 11, கேப்டன் கோஹ்லி 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ரகானே 25 ரன், விஹாரி 15 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரகானே 29 ரன் எடுத்து வெளியேற, விஹாரி மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அஷ்வின் 4, இஷாந்த் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷப் பன்ட் 25 ரன் எடுத்து (41 பந்து, 4 பவுண்டரி) சவுத்தீ வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டார். பூம்ரா டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 2வது இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81 ஓவர்). ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 5, போல்ட் 4, கிராண்ட்ஹோம் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அசத்தியது. லாதம் 7, பிளண்டெல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய சவுத்தீ ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. நம்பர் 1 அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய நியூசிலாந்து அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 60 புள்ளிகளை பெற்றது. இது அந்த அணியின் 100வது டெஸ்ட் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Wechcha Sencha ,New Zealand ,Wellington ,team ,Indian , Quality Excellence ,Wellington, 10 wickets
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா