ரஞ்சி கோப்பை அரை இறுதியில் கர்நாடகா-பெங்கால் மோதல்: குஜராத்- சவுராஷ்டிரா பலப்பரீட்சை

ஜம்மு: ரஞ்சி கோப்பை கால் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி ஜம்மு காஷ்மீரை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் கால் இறுதிப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஜம்முவில் நடந்த போட்டியில்  கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. கர்நாடகா முதல் இன்னிங்சில் 206 ரன், 2வது இன்னிங்சில் 316 ரன் எடுத்தது. முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்ட ஜம்மு காஷ்மீர், 330ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி கடைசி நாளான நேற்று 163 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா 167 ரன்னில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்த அணியின் கிருஷ்ணப்பா கவுதம் 7 விக்கெட்,  ரோனித் மோரே, பிரசித் கிருஷ்ணா, ஜெகதீசா சுசித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆந்திர மாநிலம் ஒங்கோலில் நடந்த மற்றொரு கால் இறுதியில்  சவுராஷ்டிரா-ஆந்திரா டிரா செய்தன. முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக சவுராஷ்டிரா கூடுதல் புள்ளிகள் பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.மேலும் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடந்த  பெங்கால் - ஓடிஷா அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் நேற்று டிரா ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை காரணமாக பெங்கால் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.தொடர்ந்து பிப்.29 முதல் மார்ச் 4ம் தேதி வரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் குஜராத்-சவுராஷ்டிரா அணிகளும், கொல்கத்தாவில் நடைபெறும் 2வது அரை இறுதியில்  பெங்கால் - கர்நாடகா அணிகளும் விளையாட உள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 9 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.  

Related Stories: