நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு சூழல் அனுமதி விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்ற பொதுநலன் மனு தொடர்பாக மத்திய அரசு, பொதுப்பணித் துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், 1200 எம்பிக்கள் அமரும் வகையில், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்று மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது. இதற்கான ஒப்பந்தம் குஜராத்தை சேர்ந்த எச்சிபி வடிவமைப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அனுஜ் வஸ்தவா டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லி ராஜ்பாத்தில், விஜய் சவுக்கை ஒட்டிய மரங்கள் நிறைந்த பகுதி புதிய நாடாளுமன்றம், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன்மை திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிலத்தை பயன்படுத்தாமல், தற்போது மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதற்கு டெல்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இதனை முழுக்க முழுக்க மத்திய அரசே செய்துள்ளது. மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜிவ் சக்தேர், இந்த மனு தொடர்பாக வீட்டுவசதி மேம்பாட்டுத் துறை, பொதுப்பணித் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டாலும், நிலப் பயன்பாடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியிருப்பதால், மத்திய பொதுப்பணித் துறை மரங்களை வெட்டும் பணிகளை தொடர முடியாது’ என்று நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: