திட்டங்களுக்காக நிதி வாங்கியதால் கடன் 4.5 லட்சம் கோடியாக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  சிறப்பாக பேணி காக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம் கோவை,  சென்னை பெரு நகரம் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் கூட  பெண்கள் பாதுகாப்பாக செல்லக்கூடிய நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். குற்றங்களை கண்காணிக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குற்றங்கள் பெருமளவு  குறைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாள் விழா இருப்பதால் அமெரிக்க  அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத சூழல்  ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்பட  தேவையில்லை. முன்பு என்பிஆரில் கேட்கப்பட்ட கேள்விகளோடு இப்போது 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மொழி, தாய் தந்தை வசித்த இருப்பிடம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆதாரங்கள் வேண்டும் என கேட்கிறார்கள். மத்திய சட்டத்துறை அமைச்சர் விவரம் தெரிந்தால், ஆதாரம் இருந்தால் தரலாம், கட்டாயமில்லை என தெளிவுபடுத்திவிட்டார். 3 அம்சங்கள் விருப்பம்  இருந்தால் சொல்லலாம். ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி  விட்டார்கள். இந்த ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பழைய கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம். பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி  வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் கடன் தொகை உயர்ந்துவிட்டது. இன்றைக்கு 3.5 லட்சம் கோடி கடனும், முந்தைய கடன் 1  லட்சம் கோடி என 4.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. சிறுபான்மையினர் போராட்டத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கம் எங்களுடையது அல்ல. எந்த போராட்டம் நடத்தினாலும் எங்கள்  அரசு அனுமதி தருகிறது. 7 பேர்  விடுதலை விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. கவர்னர்தான்  இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: